Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 11 அக்டோபர், 2009


கால பைரவர்
சிவனுடைய பக்தர். நகரின் காவல் தெய்வம். மத சம்பந்தமான நியாயஸ்தர்.
சிவனின் நகரமான காசியை கண்காணித்து வர பைரவர்களின் தூதுவர்கள் நகரின் ஒவ்வொரு பகுதியிலும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பண்டாக்கள் மயில் பீலியினால் முதுகில் தட்டி பாபம் போக பிரார்த்திக்கிறார்கள். கறுப்புக் கயிறு வாங்கி பண்டாவிடம் கொடுத்தால் அவர் அதை மிருத்தியஞ்சய மந்திரம் சொல்லி பைரவர் திருவடியில் சாத்தி நமக்கு எடுத்துதருகிறார்கள்.
பைரவர் கோவிலில் கட்டப்படும் காசிக்கயிறு உடல் நலத்திற்கும் வாழ்க்கை வளர்ச்சிக்கும் காப்பாக அமையும். காசிக்கயிறு என்ற விசேஷமான காப்புக் கயிறு இங்கு மட்டும் தான் கிடைக்கும்.
உற்றார் உறவினர் அனைவருக்கும் காசிப்ப்ரசாதமாக தர தவறாமல் வாங்கவேண்டும். பைரவரது வாகனம் வேதத்தின் அம்சம் (நாய்)தான்.
காசிக்கு வருபவர்கள் காசி யாத்திரை முடிந்து திரும்ப ஊர் செல்லும் முன் கடைசியாக விடை பெற்றுச் செல்லவேண்டிய கோவில்.

வராஹி அம்மன்

வராகி அம்மனை தரிசிக்க வருபவர்கள் சூரிய உதயத்திற்கு முன் வருபவர் மட்டும் தரிசிக்கலாம்.

மற்ற நேரங்களில் தரிசனம் தருவதில்லை.

பாதாள குகையில் உள்ள வராஹி அம்மன் சங்கு சக்கரம் வாள் கேடயம், தண்டக்கோல், கலப்பை, அபயம், வரம் என்ற எட்டுக் கைகளுடன் அம்மை காட்சி தருகிறாள்.

வெற்றியின் வடிவம்.

நள்ளிரவு 12 மணிக்கு மேல் தான் அபிஷேகம் ஆராதனை விடிகாலை 5.30 மணி அளவில் சூரிய உதயத்திற்கு முன்பு நடை சாத்தி விடுகிறார்கள்.





கொவ்டிமாதா கோவில்

கொவ்டிமாதா கோவில்- சோழி அம்மன்- ஜெம் கொவ்டி மாதா, மகாதேவி, ஜெய காசி நிவாசனம், சர்வதுக்க ஹரதேவி, ஹரதேவி ஹரப்பிறியே, சமுண்டே நாராயனியம் நமோஸ்துதே என்று ஸ்லோகம் கூறி காசி பலம் ஹமுகோ கொவ்டி பலம் மாகோ என்று பண்டா மாதாவிற்கு அர்ச்சனை செய்தவுடன்,

காசிக்கு வந்த பலன் எங்களுக்கும் சோழி பலன் தேவியாகிய தங்களுக்கும் என்று கூறி சோழிகளை தேவியின் பாதத்தில் சமர்ப்பித்தோம்.

சோழி அம்மன் கோவிலில் தரும் சோழிகள் சிலவற்றை பிரசாதமாக வீட்டிற்கு எடுத்து வரலாம்.

துர்க்கை கோவில்
காசி நகரின் தெற்கே உள்ளது. துர்கை நிற்கும் நிலையில் கபால மாலை அணிந்து ஆறு கைகள் வெளிப்பட சிவந்த நாக்கு வெளித் தெரிய உக்கிரத்துடன் காட்சி தருகிறாள்.
பல விதமான வண்ணத் துணிகளை பாதத்தில் வைத்து பிறகு தங்கள் தலையில் கட்டிக் கொள்கிறார்கள். சிலர் அங்குள்ள மரத்திலும் கட்டுகின்றனர்
செவ்வாய் கிழைமைகளில் கூட்டம் அதிகம்.


விசாலாஷி கோவில்

விசாலாஷி கோவில் விஸ்வநாதர் சன்னதிக்கு சிறிது தொலைவில் ஒரு குறுகிய சந்தில் உள்ளது,

மிகவும் அழகிய கோவில். உலக மக்களுக்கு பார்வதியும் பரமேஸ்வரரும் தான் தாய் தந்தையர்கள்.

காசியில் விசாலாஷியாகவும்,அன்னபூர்ணியாகவும் எழுந்தருளியுள்ளார்கள்.

காசி விசாலாட்சி அம்பாள் கோவில்ளில் பிரதானமானது. சக்தி பீடங்களில் பெரும் பெருமை கொண்ட பீடம்.

காசி விசாலாட்சி வரங்களை வாரி வழங்குகிறாள்

அன்னபூரணி கோவில்

விஸ்வநாதர் சன்னதிக்கு அருகாமையில் உள்ளது. தீபாவளி பண்டிகையின் போது மூன்று நாட்கள் மட்டும் தங்கத்திருமேநியாளின் பொற்சிலை பக்தர்கள் தரிசனத்திற்க்காக திறக்கப்படுகிறது பிறகு திரை போட்டு விடுகிறார்கள்.

பக்தர்கள் அனைவரும் பசி, பட்டினி இன்றி அன்னபூர்ணா தேவி அருள் பாலிக்கிறாள். ஆதி சங்கரர் அன்னபூர்ணா அஷ்டகத்தில் அன்னையின் மகிமையையும் சக்தியையும் ஒவ்வொரு ஸ்லோகத்திலும் வர்ணிக்கிறார் நமக்காகப் பிட்ஷை கேட்கிறார்.

ஜகன்மாதா அன்னபூர்ணிஸ்வரி பரிபூரண பிரகாசத்துடன் ஜகன்ஜோதியாக காட்சி தருகிறாள். தலையில் மணிமகுடம், மார்பிலும் கரங்களிலும் மின்னும் மணியாரங்கள், நவரத்தினங்களும், வைடூரியங்களும், மரகத பவழ,கோமேதக, மாணிக்கங்கள் டால் அடிக்கின்றன. பொன் நகைகள் பூண்ட பராசக்தி புன்னகையால் அருள் பாலிக்கிறாள்

இடக்கரத்தில் தங்கக்கிண்ணம், வலக்கையில் தங்கக்கரன்டி கொண்டு அன்புருவாக உணவு போடும் அன்னபூரணி ஞானத்தை விசேஷமாக அனுக்கிரகிக்கிறாள். எதிரில் திருவோடு ஏந்தி நிற்கும் விஸ்வேஸ்வரருக்கு அன்னமிடுகிறாள். ஸ்ரீதேவியும் பூதேவியும் இருபுறமும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களும் வலக் கரங்ககளை உயர்த்தி நம்மை ஆசீர்வதிக்கிறார்கள். அவையும் தங்கப் பதுமைகளே.

எங்கள் செல்வம் பெருக வேண்டும், நல்வாழ்வு மலர வேண்டும் என்று மனமுருக பிரார்த்தனை செய்தோம். அன்னபூர்ன தேவி எதிரில் ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரமேரு யந்திரம் தர்சிக்க முக்கியமானது.

காசி விஸ்வேஸ்வர்

காசி கோவில் உள்ளே சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். சதுரமான சிறிய அறையின் நடுவில் சிவன் தரைத்தளத்தில் உள்ளார். நீள் சதுரமான ஒரு வெள்ளி தொட்டிலில் அமர்ந்து ஆசீர்வதிக்கிறார். காசி விஸ்வநாதர் சன்னதி விமானம் தங்ககூரை வேயப்பட்டு ஜொலிக்கிறது. வாயில் கதவுகள் வெள்ளி கவசத்தால் செய்யப்பட்டுள்ளது.

சிவலிங்கத்திற்கு மேற்புரமிருந்து கங்கை நீர் சிறிது சிறுதாக சிவலிங்கம் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. தரையில் கைக்கெட்டும் தூரத்தில் விஸ்வநாதர் இருப்பதால் அனைவரும் தொட்டு நமஸ்கரிப்பதுடன் தங்கள் கரங்களாலேயே கங்கா தீர்த்தம், பால், தேன் , வில்வம், தயிர், விபூதி, ருத்திராட்சங்கள் என அவரவர்கள் சாஸ்திரப்படி, வழ்க்கப்படி, அபிஷேகம் செய்து லிங்கத்தை சுற்றி ஆராதிக்கின்ற காட்சியை காணலாம்.

பிரசாதம் பெறலாம். பூஜை நடை பெறும் போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும் வேத பாராயணங்களும் மேளதாளங்களின் இன்னிசையும் கோவிலின் உள்ளேயும் வெளியேயும் இருக்கும் போது கேட்டு அடையும் மனநிம்மதி, மகிழ்ச்சிக்கு அளவில்லை. சப்தரிஷி பூஜை நடைபெறும்போது சாமவேத கோஷம் எங்கும் கேட்கிறது ஐந்து தலையுள்ள நாகாபரணம் லிங்கத்தின் மீது சூட்டப்பட்டு பூஜை ஆரத்தி நடை பெறுகிறது. பூஜை மிகவும் நேர்த்தியாக ஒரு மணி நேரம் நடைபெறுகிறது.

விஸ்வநாதர் சன்னதியில் மதம் ஜாதி வேறுபாடின்றி அனைவரும் தொழுகின்றனர்.

உமாபதியான பரமேஸ்வரரின் லிங்கம் காலையில் தரிசிப்பதால் ஸ்வர்க்கத்தை நல்குவதாகும், நடுப்பகலில் தரிசித்தால் அஸ்வமேத பயனையும், மாலையில் தரிசித்தால் மோஷ்த்தையும் கொடுக்கும். சூரியன் மறையும் அந்தப் பிரதோஷ வேளையில் பஞ்சாஷரம் சொல்லி பரமேஸ்வரனை ஆராதித்தால் முக்காலத்திலும் சமமாக விரும்பிய பயனை திண்ணமாக அடையலாம்.

தசாச்வேமேத நதிக்கரையிலிருந்து ஒரு குறுகிய தெரு காசி விஸ்வநாதர் சன்னந்திக்கு செல்கிறது கங்கையில் ஸ்நானம் செய்த பிறகு விஸ்வநாதரை தரிசித்தோம்

தினசரி ஆயிரக்கணக்கில் யாத்ரீகர்கள் வருகை புரிந்தாலும் அமாவாசை, பிரதோஷம் மற்றும் விழாக்காலங்களில் லட்சக் கணக்கில் கூடுகின்றனர்.

நாங்கள் காசிக்கு சென்ற பொழுது ஆடி அமாவாசையாக இருந்ததால் இரண்டரை லட்சம் யாத்ரீகர்கள் வருகை புரிந்ததாக கூறினார்கள் நாங்களும் வழி நெடுக யாத்ரீகர்கள் பால் காவடி எடுத்து காவி நிற வேஷ்டி அணிந்து நீண்ட நாட்கள் விரதத்துடன் வந்திருந்ததை கண்கூடாக பார்த்தோம்

எங்களுக்கு அமாவாசை நேரத்தில் விஸ்வநாதரை தரிசிக்க முடியுமா என்ற சந்தேகம் தோன்றி பயமாகவும் இருந்தது ஆனால் விடிகாலை 5 மணி தரிசனம் திருப்தியாக செய்தபோது கும்பல் குறைவாகவும் அனைவரும் இரவு முழுவதும் பூஜையில் கலந்து இறைவனை தரிசித்து சென்றுள்ளனர் என்பதையும் அறிந்தோம் .

தமிழக மக்களிடம் உயிர் பிரியும் முன் கங்கை நீரை நாவில் இறுதியாக விட்டு சிவஸ்துதி கூறி மோட்சத்திற்கு அனுப்புவது வழக்கம்.தமிழ் நாட்டில் காசி விஸ்வநாதர் சந்நதி பெரும்பாலும் எல்லா சிவாலயங்களிலும் காணப்படுகிறது.

தீபாவளியை ஒட்டி காசி விஸ்வநாதரை மனதார வணங்கி அவரது நல அருள் பெறுவோம். தீபாவளியன்று நாம் மற்றவரை கேட்கும் முதல் கேள்வியே கங்கா ஸ்நானம் ஆச்சா?..

காசியில் தரிசிக்கவேண்டிய முக்கிய ஆலயங்கள்

துண்டி விநாயகர்- விஸ்வநாதர்-அன்னபூரணி-விசாலாஷி-துர்கை-சோழி அம்மன்- வராகி அம்மன்- பைரவர்

துண்டிவிநாயகர்

விஸ்வநாதர் கோவிலுக்கு முன்பு இருந்து ஆசீர்வதிக்கிறார். சிறு கோயில். சந்து ஒன்றில் கடைகளுக்கு நடுவே விநாயகர் அமர்ந்த நிலையில் செந்தூர நிறத்தில் காட்சி அளிக்கிறார்.

செந்தூர வர்ணத்தில் குங்கும அபிஷேகம் செய்கிறார்கள்..துண்டி மகராஜ் என்று பக்தர்கள் விநாயகரை மிகுந்த மரியாதையுடன்அழைத்துவழிபடுகிறார்கள்.

காசிக்கு வருபவர்கள் இவரிடம் உத்தரவு பெறாமல் போகக்கூடாது என்பது சம்பிரதாயம். இக் கோவிலுக்கு அருகிலிருந்து தான் பக்தர்களை சோதனையிட்டு விஸ்வநாதர் சன்னதிக்கு அனுப்புகிறார்கள்.

2

ஸ்ரீ காசி விஸ்வநாதர்

www.shrikashivishwanath.org

ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தின் அதிகார பூர்வ வலைத்தளமான இந்த வலைத்தளத்தில் காசி விஸ்வநாதரை பற்றிய அனைத்து தகவல்களும் அறியலாம்.

காசியில் உள்ள விஸ்வநாதர் கோவில்,தேவாலயங்கள், காசி தலமகிமை, ஜோதிர்லிங்கம், முக்கிய விழாக்கள், தினசரி பூஜை, அர்ச்சனைகள் நடைபெறும் நேரம் செலுத்தவேண்டிய கட்டணம் மற்றும் டூரிஸ்ட் தகவல்கள் தேவஸ்தானத்திற்கு நன்கொடை அளிப்பதாயின் எவ்வாறு? அதனை எப்படி உபயோகிக்கிறார்கள் என்று அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வலைத்தளத்தை பார்த்த தாங்கள் அனைவரும் அனைத்து நலன்களும் அனைத்து செல்வங்களும் பெற்று வாழ்வில் வெற்றியடைந்து மேன்மேலும் வாழ வாழ்த்துக்கள்.

அன்புடன் பத்மாவதி சுந்தரமுர்த்தி- புஷ்பலக்ஷ்மி ஹாலசியம்- இந்திரா வாசுதேவன்- குடும்பத்தினர் கோபாலன் ஜெயலஷ்மி -கணேசன் உஷா- தம்பதியினர் மற்றும் யாத்திரையில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களும் நண்பிகளும்.

காசி வாரணாசி யாத்திரை


சம்பிரதாய முறைப்படியான காசி வாரணாசி யாத்திரை

தென்னாட்டிலிருந்து காசி யாத்திரை செல்பவர்கள்

முதலில் ராமேஸ்வரம் சென்று சங்கல்பம் செய்து, அக்னி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, கடலில் மூழ்கி மணல் எடுத்து பின்னர் மூதாதையருக்கு சிரார்த்த காரியங்களை செய்து பிதுர் தர்ப்பணம் முடித்து, ராமநாத சுவாமி கோயிலில் உள்ள மற்ற 21 தீர்த்தத்திலும் நீராடி, ராமநாதசுவாமி தரிசனம் முடித்தபின்னர்,

அக்னி தீர்த்தத்தில் எடுத்த மணலை பத்திரமாக பூஜை செய்து, காசி யாத்திரை ஆரம்பித்த பின்னர் முதலில் பிரயாகை-திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்து, ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த மணலை கரைத்தபின்னர்,

பின்னர் காசி சென்று, கங்கையில் ஸ்நானம் செய்து, காசி விஸ்வேஸ்வரர், அன்னபூரணி, விசாலாட்சி மற்ற தெய்வங்களை தரிசித்து பிறகு கடைசியாக காலபைரவரை தரிசித்து ஆசி பெற்று விடை பெற்று,

பிறகு கயாவிற்கு சென்று மறைந்த மூதாதையர்களுக்கு சிரார்த்தங்களை செய்து மீண்டும் திரிவேணி சங்கமம் வந்து கங்கையில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு பின்னர் ராமேஸ்வரம் சென்று ராமேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தால் தான் காசி யாத்திரை பூர்த்தியாகும்.

சம்பிரதாயப்படி இப்படி தான் செய்யவேண்டும் இருந்தாலும் இன்றைய அவசர உலகத்தில் யாத்ரீகர்கள் செளகர்யத்தை உத்தேசித்து சிலவற்றை கடைபிடிக்க முடியவில்லை.

காசி பிரயாகை கயா யாத்திரை செல்ல முடிவேடுத்தபின்னர், சம்பிரதாயமாக எவ்வாறு செல்வது என்று புத்தகங்களிலும் வலைத்தளங்களிலும் பார்த்து அறிந்து அதற்கேற்றவாறு பயணத்தை அமைத்துக்கொண்டோம்,

சேலத்திலிருந்து காசி சென்றடைய 2000௦௦௦ கிலோ மீட்டர் பயணம் தான். முதலிலேயே ரயிலில் படுக்கை வசதி போக வர பதிவு செய்திருந்ததால் நிம்மதியாக சென்று வர முடிந்தது. சைவ சாப்பாடு ஆனதால் வழி பயணத்தில் சாப்பாட்டிற்கு சிறிது கஷ்ட்டப்பட வேண்டியதாகிவிட்டது பால், தயிர், லஸ்சி, மோர், பழம் என்று கிடைப்பதை சாப்பிட்டு சமாளித்தோம். நாற்ப்பது பயணிகளுடன் பயணித்த அனுபவம், இறை இன்பம் அனைத்தும் சுகானுபவமே.. அதை அனுபவத்தில்தான் உணர முடியும்.

காசி உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. காசி நகர் புனிதமான கங்கை கரையின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது மோசல் சராய் ரயில் நிலையத்திலிருந்து 15 கி மீ தொலைவில் வாரணாசி ரயில் நிலையம் உள்ளது.

காசி வாரணாசி (பனாரஸ்) அனைத்தும் ஒன்று தான் . அருகிலேயே உள்ளது .இவ்விரண்டு இடங்களிலும் ரயில் ஏறி இறங்கலாம் காசி ரயில் நிலையத்திலிருந்து விஸ்வநாதர் ஆலயம் 3 கி மீ தூரம் தான்.

வருணா ஆசி ஆகிய இரு நதிகளின் சங்கமத்தளம் ஆதலால் வாரணாசி என்று பெயர். ஜோதிலிங்க முக்தி தரும் தலங்களில் எழில் ஒன்று.

ராமேஸ்வரம், காசி, பிரயாகை என்னும் அலகாபாத், கயா முதலியவற்றை தரிசித்து இறை அனுபவமும் மனநிம்மதியும் பாபங்கள் விலகி, தோஷ சாந்தி ஏற்ப்பட்ட நிம்மதி பெற எனக்கு 60ஆண்டுகள் தேவைப்பட்டது.

காசியில் இருந்து திரும்ப வந்தவுடன் என்ன்னுடைய ஷஷ்டியப்த பூர்த்தி வந்த நாளும் நீங்காத நினைவுகள் தான்.. பயணம் தொடரட்டும் எப்பொழுது அடுத்த பயணம் செல்லலாம் என்று உறவினர்களும் பயண நண்பர்களும் தொடர்ந்து விசாரிக்கும்பொது ஏற்படும் சந்தோசம் சந்தோசம் சந்தோசம் தான் மாற்றமில்லை..

நாற்பது பயணிகளுடன் ஒன்பது நாட்கள் பயணித்த அனுபவம் மறக்க இயலாதது. ஒவ்வொருவரும் காட்டிய அன்பு, நட்பு ,உதவியது ஆகியவற்றிற்கு எல்லையில்லை.