Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

திங்கள், 12 அக்டோபர், 2009


காசி பட்டு

காசி பட்டு- பனாரஸ் பட்டு வட நாட்டினர் பனாரஸ் பட்டு புடவை கட்டி திருமணம் செய்வது சிறப்பான ஒன்று. காசிப்பட்டு காசியில் நெய்யப்படும் புடவைகள் மிகவும் உயர்தரமானவை. மதிப்பிர்க்கேற்றவாறு அதன் தரமும் மாறுபடுகிறது. பெரும்பாலும் முஹம்மதிய சமுதாயத்தாரால் நெய்யப்படுகிறது.

உணவு

உணவு தயிர் கத்தி போன்ற கரண்டியால் தான் வெட்டித்தருகின்றனர் அந்த அளவிற்கு திடமாகவும், சுவையாகவும் உள்ளது.இங்கு அளிக்கப்படும் லெஸ்சி மிகவும் சுவையாகவும், விலை மலிவாகவும் உள்ளது. மன்கோப்பையில் தரும் கொதிக்கும் டி, காபி, பாலினால் தயாரிக்கப்பட்ட இனிப்புகள், இனிப்பு புளிப்புடன் கூடிய ஜிலேபி, பாதுஷா வகைகள், இனிப்புகள் அனைத்தும் காலை டிபனுடேன் சாப்பிடுகின்றனர். இட்லி, தோசை, பூரி சப்பாத்தி ஆகிய தென் இந்திய உணவுகளும், சட்னி சாம்பாருடன், சுவையாக் கிடைக்கிறது.

காசியில் இறப்போர்க்கு மட்டுமின்றி காசிக்கு வெளியில் தொலைவில் இறந்திருந்தாலும் அவரது அஸ்தியை காசியில் கங்கையில் கரைத்து ஈமக்கிரியைகள் செய்தவுடன் அவர்களுக்கும் முக்தி கிடைக்கிறது.

சமஸ்கிருத மொழி கற்றுக் கொள்ள நாட்டின் பல பாகங்களிலிருந்து பெரும்பாலோனர் வந்து கற்றுக் கொள்கிறார்கள். இதற்கான சமஸ்கிருத பல்கலைக் கழகம் உள்ளது. வேதம் கற்று புலமை பெற்றுள்ள பண்டிதர்களை தரிசிக்கும் பாக்யம் பெறுகிறோம். பல மதத்தவர் பல்வேறு மொழி பேசும் யாத்ரீகர்கள் வருகை புரிகின்றனர்.

புத்த மதத்தினருக்கும் காசி சிறப்புத் தலம். ஞானம் பெற்ற புத்தர் முதல் போதனையை இங்கே தான் துவக்கினார். மகாவீரருக்கு முன்னோடியான தீர்த்தங்கர பரஸ்வநாதர் அவதரித்த இடம் ஆதலால் ஜெயினர்களுக்கு புண்ணிய இடம்.

காசியில் பக்தர்களிடம் மக்கள் காட்டும் அன்பும் பரிவும் பக்தியும் அதிகம்.

தெருவில் கேட்பாரற்று திரியும் பசுக்களும் நம்மைக்கண்டு மிரல்வதில்லை. சிறிய சந்துகளிலெல்லாம் நின்று கொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ இருக்கும். மனிதர்களை கண்டால் வழி விடுகிறது. சாயந்திரமானால் பசுவின் பாலை கறந்து விட்டு மறுபடியும் மேய விட்டு விடுகிறார்கள். பசுவிற்கு உணவு அல்லது நீர் தேவையானால் அது வீட்டு வாசலில் அல்லது மடாலயத்தின் வாசலில் வந்து நின்று தேவை பூர்த்தியாகும் வரை இருந்து பின் செல்கிறது.

காசிக்கு சென்ற பலன் பாவங்களை போக்கி மனிதனைக் குற்ற உணர்விலிருந்து மீட்டெடுத்து அவனது எஞ்சிய வாழ்வை அவனுக்கும் பிறருக்கும் பயனுள்ளதாக நல்வழியில் செலுத்தத்தக்க சக்தி கொண்டது தான் காசித்தலமும் கங்கைக்கரையும்.

பொருள் இல்லாதவர்களால் முடியாது பொருள் இருந்தும் அவர்களுக்கு பிராப்தி இருந்தால் தான் காசி பயணம் செல்ல முடியும்.

செப்புக் கலசத்தில் அடைக்கப்பட்ட கங்கை நீர் எத்தனை வருடங்கள் ஆனாலும் சிறிதும் கெடாமல் நன்றாகவே இருப்பது காசி ஸ்தலத்தின் மகிமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

காசியில் உதய சூரியனை ஆராதிப்பதர்க்காகவே அதிகாலையில்/ மாலையில் கங்கையில் நீராடி பிரார்த்தனை செய்து புண்ணியம் பெற பக்தர்கள் விழைகின்றனர். ஓம் நமச்சிவாய ஜெய ஜெய சிவஷங்கர் என்கிற கோஷம் எந்நேரமும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது

காசி ஷேத்திரத்தில் ஒவ்வொரு வீதியிலும் தெருவுக்குத் தெரு கோவில்களும் புண்ணிய தீர்த்தங்களும், புண்ணிய மடாலயங்களும் உள்ளன. சுமாராக இரண்டாயிரம் கோவில்களுக்கு மேல் காசியில் உள்ளது. காசியில் சந்துகள் எல்லாம் கங்கை கரையை நோக்கியே செல்கிறது.

சைக்கிள் ரிக்க்ஷா அதிகம் உள்ள நகரம். சிறிய சந்துகளில் பயணிக்க காசி மாநகரை முழுமையாக காண சைக்கிள் ரிக்க்ஷா தான் ஏற்றது. பெரும்பாலும் சாதரண மக்கள், யாத்ரீகர்கள் இதில் தான் பயணிக்கின்றனர். மூன்று கிலோ மீடேருக்கு ருபாய் 15 தான் மிகவும் குறைவான தொகை தான்.

காசியில் வசதி குறைவாக இருந்தாலும், காசிக்குப் போகவிரும்புவோர் ஏராளம். காசிக்கு சென்று திரும்புவதில் ஒரு சந்தோஷம். காசிக்கு சென்று திரும்பியவர்களை காண்பதும் புனிதமாக கருதப்படுகிறது. மற்றவர்களுக்கும் காசிக்கு செல்லவேண்டும் என்ற உந்துதலை வளர்க்கிறது.

கங்கைக்கரையில் மகான்களும் மகாராஜாக்களும் பக்தர்களும் பல தீர்த்தக்கட்டங்களை அமைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் அமைத்தவர் பெயரில் அழைக்கப்படுகிறது. கங்கைகரையை ஒட்டி பல ஆலயங்கள் உள்ளன. தங்குமிடம் கொண்ட வசதியான மடாலயங்களும் இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் அந்த அந்த வகுப்பாருக்கு முன்னுரிமை அளித்து வழ்ங்கப்படுகிறது.

மக்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது காசி வந்து கங்கா ஸ்நானம் செய்து காசி விஸ்வநாதரை தரிசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். எந்த ஒரு வசதியும் எதிர்பார்க்காமல் நாம் வாழ்கின்ற சூழ்நிலைக்கு எதிர்மாறான சூழ்நிலையிலும் நெரிசலில் இடிபட்டு மற்ற அசொவ்கர்யங்களை மறந்து கடவுளை தியானிப்பது ஒன்றே குறியாக கூட்டம் கூட்டமாக அலைமோதும் காட்சியை காண்பதே பெரும் புண்ணியம்.

மனபாரம், குடும்பக்கவலை, அலுவலகக் கவலை இன்றி நண்பர் உறவினர் எதிரிகள் நினைவின்றி அங்கு தங்கி இருக்கும் நாட்கள் நிஜமாகவே சொர்க்கம் தான்.

மோஷமளிக்கும் அருமையான ஷேத்திரம் வேறு எங்கும் இல்லை. காசி கட்டங்களில் பல் வேறு கட்டங்களில் நடை பெரும் அனுஷ்டிக்கப்படும் ஸ்நானம், ஜபம், தியானம், தானம், தவம் முதலியவை மிக்க மஹத்துவமானது என்றும் உடன் பலன் அளிக்கக்கூடியது என்று பல புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
காசி என்ற இரண்டு எழுத்துக்களுக்கான அர்த்தத்தைக் காதால் கேட்டு அனுசந்தானம் ஜபம் செய்பவர்களுக்கு மறுபடியும் கர்பபவாசமில்லை அதனால் பயமில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பலர் தனது அந்திம தசையில் காசியில் தனது சரீரத்தைவிட வேண்டி காசியில் வாசம் செய்கிறார்கள்.

மோஷாபுரி காசியில் பெரும்பான்மையான கட்டிடங்கள் செங்கற்களாலேயே கட்டப்பட்டுள்ளன. உத்திரப்பிரதேசம் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையாக செங்கற்களாலேயே கட்டப்பட்டுள்ளன. காரணம் புரியவில்லை? சிமெண்டின் அருமை புரியவில்லையா? அல்லது வறுமைக்கோட்டில் இருப்பதுதான் காரணமா? அப்படியென்றால் நான்கு அல்லது ஐந்து மாடி கட்டிடங்களும் இதேநிலமைதானே.

காசியில் மின்சாரம் பகலில் பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை நின்று விடுகிறது. எப்போது வருமென்று தெரியவில்லை ஆனால் இரவில் மின்சாரம் நிற்பதில்லை மற்றும் மின்சாரம் குறைந்த மின்வலியளவு தான் வருகிறது. நல்லவேளை இரவில் நிறுத்துவதில்லை. தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை. இதுபோன்று அடுத்த மாநிலங்களுக்கு சென்று வந்தால் தான் அதன் அருமை புரிகிறது.

தென்னகத்துக் கோயில்களை போல் கோயில்களின் பிரம்மாண்டத்தை பார்க்க இயலாது ஆனால் சில கோயில் தென்னகத்து கலை அம்சத்தை பிரதி பலிக்கிறது, விசாலட்சி கோயில் ஒரு எடுத்துக்காட்டு.

தென்னகத்தில் சிவன் சன்னதி முன்பு காணப்படும் பிரம்மாண்ட நந்தி இங்கு விஸ்வநாதர் சந்நிதியில் இல்லை. அதனால்தானோ என்னவோ காசி நகர் முழுவதும் நந்திகள் (பசுமாடுகள்) வலம் வருகின்றன.

சேதுவிலிருந்து இமயம் வரை வாழும் மக்கள் பலரது பல்வேறு பண்பாடுகள் சம்பிரதாயம் மேலும் பல்வேறு மொழி பேசும் மக்கள் வருகை புரிகின்றனர்.

இணைந்த பாரதத்தை இங்கு காணலாம். பாரதீய தேசிய ஒருமைப்பாட்டிற்கு முக்கிய அம்சம். காசி வெகு காலமாக தொடர்ந்து மகிமை வாய்ந்த சமஸ்கிருத மொழி போதிக்கப்படும் மையமாக இருந்து வருகிறது. காசி வாழ் வித்வான்களின் நிலையான கருத்தை நாட்டின் அணைத்து மக்களும் ஒப்புக்கொள்கின்றனர்.

காசி பாரதத்தின் வைணவ சைவ பௌத்த ஜைன மதங்களின் ஆன்மீக மையமாகவும் தேசியக்கலை கலாசார ஷேத்திரமகவும் திகழ்கிறது.

இங்கு சாமியார்கள் பைராகிகள் அஹோரிகள் என்ற தாந்தரீகர்கள் பாபாக்கள் சடை முடி தரித்த சாமியார்கள் என அனைவருக்கும் அன்னதான சத்திரங்களிலேயே உணவு வழ்ங்கப்படுகிறது பிட்ஷை/பிச்சை எடுக்கும் சாமியார்கள் யாரும் காசியில் இல்லை

எப்பொழுது அடுத்த பயணம் செல்லலாம்?
மணிகர்ணிகா/அரிசசந்த்திரா காட்

மணிகர்ணிகா/அரிசசந்த்திரா காட் நம் கண்ணெதிரே வெகு அருகிலேயே சடலங்கள் அடுத்தடுத்து எரிக்கப்படுவதை காண்கிறோம் சுடுகாட்டின் அருகில் நிற்கிறோம் என்கின் அருவருப்போ அச்சமோ தீட்டு என்கின்ற என்னமோ இல்லை பிணம் எரிக்கப்படும் துர்நாற்றமும் இல்லை.

சடலத்தை கங்கையில் முக்கிவிட்டு ஈரம் சற்று வடிவதற்க்காக தரையில் கிடத்தி உற்றார் உறவினர் அமர்ந்திருக்க தீ மூட்டும் உரிமை உள்ளவர் மொட்டை அடித்துக்கொள்கிறார் தகனம் செய்பவர் தயார் என்று சொன்னவுடன் சடலம் மேடைக்கு எடுத்துச்செல்லப்பட்டு சதா எரிந்து கொண்டிருக்கும் அக்னியிலிருந்து தீ எடுத்து சவத்திற்கு மகன் அல்லது உரிமையுள்ளவராலோ தீ வைக்கப்படுகிறது சரீரம் ஒரு மணி நேரத்தில் பிடி சாம்பலாகி விடுகிறது அந்த சாம்பலை கங்கையில் கரைத்து விடுகிறார்கள்.

இத்தத்தில் இறப்பவர்க்கு விஸ்வநாதர் தாரக மந்திரத்தை உபதேசித்து முக்தி அளிக்கின்றார் என்பது சாஸ்திரம்

மணிகர்ணிகாவில் ஸ்நானம் செய்பவர்கள் மகா சங்கல்பம், பிராயசித்தம், அனுக்ஜை, பலதானம், எல்லாம் செய்கின்றனர். சந்தியாவந்தனம் முதலியவற்றை முடித்துக் கொண்டு. சந்தர்ப்பனை செய்யும் வழக்கம் உள்ளது. சிலர் தான தர்மங்களும் செய்கிறார்கள்.

வபனம் செய்து கொண்டு நமது சரீரத்தை அங்கு விடுவதற்கு அடையாளமாக அணிந்திருந்த வேட்டியை அங்கேயே நதியில் விட்டு விடுகிறார்கள்.

மணிகர்ணிகை கரையில் செய்வது ஹிரண்ய சிரார்த்தம். தீர்த்தக் கரையில் ஹிரண்ய சிரார்த்தம் தான் செய்ய வேண்டும். அனுமான் காட்டில் உள்ள இல்லங்களில் செய்யப்படும் திதி அன்ன சிரார்த்தம்.

நீத்தார் கடன் செய்தோர் அருகிலுள்ள ஏதேனும் ஒரு ஓட்டலில் பணம் கொடுத்து அவர்கள் சக்திக்கேற்றவாறு ஒன்று முதல் நூறு பேர் வரை அன்னதானமளிக்க ஏற்ப்பாடு செய்கின்றனர். சாப்பாடு அல்லது டிபன் எது வேண்டுமானாலும் இருக்கலாம். அதனால் ஓட்டலிலும் இலவசமாக சாப்பிடலாம்.

காசிக்கு சென்று கங்கையில் நீராடினால் பாவங்கள் எல்லாம் தொலைந்து விடும் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருகிறது.

அந்தக் காலத்தில் பணவசதி படைத்தவர்கள் வேதம் கற்றவர்கள் மட்டும் காசிக்கு தீர்த்த யாத்திரை சென்று அங்கேயே முக்தியும் அடைந்தனர். இறுதி காலத்தை அங்கேயே கழித்து காசியில் மரணமடைவதையும் பெறும் பேராக கருதினர்.

தற்போது அனைத்து தரப்பினரும் யாத்திரை புரிகின்றனர். புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து தோஷத்தில் இருந்து விடுபடுவதுடன் முன்னோர்களை வழிபாடு செய்யும் போது அவர்களின் ஆசியும் கிடைக்கிறது.

காசியில் இறப்போர்க்கு மட்டுமின்றி காசிக்கு வெளியில் தொலைவில் இறந்திருந்தாலும் அவரது அஸ்தியை காசியில் கங்கையில் கரைத்து ஈமக்கிரியைகள் செய்தவுடன் அவர்களுக்கும் முக்தி கிடைக்கிறது.

காசி விஸ்வநாதரை தரிசிப்பதற்கும் கங்கையில் குளிப்பதற்கும் நல்ல திடகாத்திரமான உடல் நிலை தேவை. ஒய்வு காலத்தில் செல்ல வேண்டிய இடங்கள் என்று ஒதுக்கி வைக்காமல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்போதே தம்பதியராக காசி ராமேஸ்வரம் யாத்திரை சென்று வருவது நலம் பயிக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

கங்கை அடைய உதவும் படிக்கட்டுகள் வழுக்குமாதலால் துணையின் கைபிடித்து செல்வது நல்லது.


கங்காஆரத்தி

கங்காஆரத்தி தசாச்வமேத கட்டபடித்துறையில் மலை 6.30 மணிக்கு ஆரம்பிக்கிறார்கள். கங்கா ஆரத்தி எழு பண்டாக்களால் நடத்தப்படுகிறது. புஷ்பம், ஊதுவ்ற்றி, சாம்பிராணி, தீப அடுக்கு, கற்பூரம், தீப தூபம், வெண்சாமரம் கொண்டு ஆரத்தி கங்கமாதவிற்க்கு சிறப்பாக பூஜை நடைபெறுகிறது.

வெளிநாட்டினர் பெருமளவில் கலந்து கொண்டு ரசித்து அவர்களும் பூஜையிலும் பஜனையிலும் கலந்து சிறப்பிக்கின்றனர். பூஜைக்காக அமைக்கப்பட்ட மேடையில் பூஜை நடைபெறுவதும் அதற்கு எதிர்த்தர்ப்போல் யாத்ரீகர்கள் அமர அமைக்கப்பட்டுள்ள மேடையில் அமர்ந்து பூஜையில் கலந்து கொண்டு ரசிப்பதை பார்ப்பதும் மகிழ்ச்சிகரமான காட்சி.

அமர்ந்திருக்கும் யாத்ரீகர்கள் நீளமான கயிற்றை கட்டி அந்த மணியை அடிப்பதும் அதற்க்காகவே முன்னதாகவே வந்து இருக்கை பிடிக்க போட்டா போட்டிகளும் ரம்மியமானவை. பூஜைகள் நடை பெறும் போது டிரம் ஜால்ரா உடுக்கை சப்தம் முழங்க மணி சப்தம் கேட்கிறது. நான்கு திசைகளிலும் வழிபாடு நடத்துகின்றனர்.

யாத்ரீகர்கள் படகிலிருந்தும் மேடைமீது அமர்ந்தும் தீப ஆரத்தியை கண்டு களித்து தாங்களும் சிலவற்றில் பங்கு பெறுகின்றனர். கங்கா மாதகி ஜெய், ஹர ஹர மகாதேவா என்கிற கோஷங்கள் எங்கும் எதிரொலிக்கிறது. ஆரத்தி எடுத்து முடிந்தவுடன் தீபமேற்றுகின்றனர். ஒரு மணி நேரம் பூஜை நடைபெறுகிறது. திரும்புவதற்கு மனமின்றிதான் கங்கா ஆரத்தி பூஜை முடிந்தவுடன் திரும்பவேண்டியிருந்தது

கங்கைபடித்துறை

-இங்கே ஓடும் புண்ணிய நதியான கங்கை கரையில் 64 படித்துறைகள் உள்ளன. இவற்றுள்ளும் மணிகர்ணிகா- தசாதச்மேத- பஞ்சகர்நிகா- வருனாசங்கமம் -ஆசி சங்கமம் இந்த கட்டங்களில் ஸ்நானம் செய்வது அல்லது நீரைத் தலையில் தெளிதுக்கொள்வது பஞ்ச தீர்த்த ஸ்நானம் என்று அழைக்கப்படுகிறது.

மணிகர்ணிகா கட்டத்தில் தினமும் உச்சிப்பொழுதில் முப்பத்து முக்கோடி தேவர்களும் நீராட வருவதாக ஐதீகம் அதனால் உச்சி வேளையில் நீராடுவது நல்லது.

நூற்றுக்கணக்கான படகுகள் சென்று கொண்டும் வந்து கொண்டும் இருக்கும் காட்சி ரம்மியமானவை. படகில் செல்லும்போது ஸ்நானக் கட்டங்களையும் ஸ்நானம் செய்பவர்களையும், அமர்ந்துள்ள சாதுக்கள், கர்மா செய்ய அமர்ந்துள்ள பண்டாக்கள், மறுபுறம் எரிந்து கொண்டிருக்கும் பிரேதம் அனைத்தும் தரிசிக்கவேண்டியவையே.

காசியில் உள்ள படித்துறையில் மிக உயரிய படிக்கட்டுகளும் படித்துறை கோவில்கள், மடாலயங்கள், மயானங்கள் ஆகியவை உள்ளன. மலர் மாலைகள் ஈமச்சடங்குகள் பொருட்கள் எல்லாம் கங்கையில் கலந்து செல்கின்றன.ஈமக்கிரியை காரியத்தை நடத்திக் கொடுக்கும் சாஸ்திரிகள் அஸ்தி மற்றும் சம்பந்தப்பட்ட பொருட்களை ஆற்றின் அக்கரையில் கரைக்க அறிவுறுத்தப்பட்டாலும் காலத்தின் அருமை கருதி அனைவரும் கங்கையிலே கரைத்து விடுகின்றனர்.


காஞ்சி சங்கர மடம்

காஞ்சி சங்கர மடம் அனுமான் காட் பகுதியில் காஞ்சி சங்கர மடம் உள்ளது. தமிழ்ர்கள் நிறைந்த பகுதி. தமிழ் அய்யர் அதிகம் வசிக்கும் பகுதி

காசி யாத்திரை வருபவர்கள் தங்குவதற்க்காக மடத்தில் அறைகள் கட்டியுள்ளார்கள் குடும்பத்தாரோடு தங்குவதற்கு செளகர்யமாக கட்டப்பட்டுள்ளது. காசி ரயில் நிலையத்திலிருந்து நேராக சங்கர மடம் சென்று தங்கினோம்

அணைத்து வசதிகளுடன் ஆச்சர்யாள் மடத்திலேயே தங்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ஸ்ரீ சங்கர மடத்தின் முகவரி

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சர்யா சுவாமிகளின் மடம் மேனேஜர் V S சுப்ரமணியம் B.4/7 New #4/22 ஹனுமான் காட் வாரனாசி 221001

போன் 0542-2277915-2276932-2277758-09335960320-09415228721

E mail chandravns@dataone.in & kanchimuttvaranasi@gmail.com

நமது பரமாச்சரியார் பரிவாரங்களுடன் ஊர் ஊராகச் சென்ற வண்ணம் 1922-ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தை அடைந்து வழிபாடுசெய்து அங்கிருந்து கடல் மணலை எடுத்துக்கொண்டார். இம்மணலை அவர்செல்லுமிடமெல்லாம் கொண்டு சென்று பூஜையில் வைத்திருந்து பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து 1934-ஆம் ஆண்டு பிரயாகையில் கங்கையில் கரைத்துவிட்டார்.

மடத்தில் நடை பெரும் நித்ய பூஜைகளிலும் கலந்து ஆசி பெறலாம் காசி காஞ்சி சங்கர மடத்தில் வேத பாடசாலை நடை பெறுகிறது, சங்கர மடத்திலிருந்து ஐந்நூறு அடியிலேயே கங்கை ஆறு ஓடுகிறது ஒரு சிறிய வலைவுதான் ஆறு வந்து விடுகிறது. சங்கரமடத்தில் சிவன் சாரதாம்பாள் ஆதி சங்கரருக்கு ஆராதனை செய்யப்படுகிறது, கண்டு ரசித்தோம். மடத்தில் உள்ள சந்நிதியில் தியானம் செய்வதற்கு அமைதியாகவும் சாந்நித்தியமகவும் உள்ளது.

ஸ்ரீ ஆதி சங்கரர் காசியில் விஸ்வநாத அஷ்டகம், அன்னபூரணி அஷ்டகம், மணிகர்ணிகா அஷ்டகம் பாடியுள்ளார். காசி தீர்த்தத்திற்கு வந்து பிரம்ம, ஸூத்திரத்திர்க்கு பாஷ்யம் எழுதி ஸ்ரீ வியாச பகவானால் பாராட்டப்பட்டு அவரது நல்லாசியுடன் மற்றுமொருமுறை பதினாறு வயது அதிகம் பெற்று ஸ்ரீ ஆதி சங்கரர் அங்கிருந்து தமது பாரத விஜய த்தை தொடங்கினார்.

காசியம்பதியில் கங்கைக்கரையில் ஸ்ரீ சங்கர் பகவத் பாதர் உபதேசம் பல வேறு தெய்வங்களும் ஒரே கடவுள் எடுத்துக்கொள்ளும் பல வடிவங்கள் தான் என்பதை மறந்து அவரவரும் தான் வழிபடுகிற தெய்வமே மற்ற தெய்வங்களை விட உயர்ந்தது என்று வாதப்போர் செய்து வந்தனர். இது போதாது என்று அன்பே வடிவான கடவுளின் உக்கிர ரூபங்களை பலர் வழி பட்டு அதற்க்காக தாங்களும் மிகப் பயங்கரமான வழிபாட்டு முறைகளை மேற்கொண்டனர்.

கர்ம ஞான வழிகளை செம்மை செய்த சங்கரர் அன்பு மயமான ஆண்டவன் வழிபாட்டில் புகுந்துவிட்ட அச்சமூட்டுகிற அருவருப்பூட்டுகின்ற அம்சங்களை விளக்கி நாட்டில் அமைதிக்காக சஞ்சரித்தார்.

ஹனுமான் காட்

ஹனுமான் கட்டத்தை ஒட்டி கங்கை படித்துறை. இங்கு தான் அனுமார் ராமேஸ்வரத்திலிருந்து வந்து சிவலிங்கம் எடுத்து சென்றார்.

அனுமார் கோவில் சக்தியுள்ள வரப்ரசாதி என்பதனால் கேட்பவருக்கு கேட்டவரம் அருளும் வல்லமை கொண்டவர். இவரது பெயரால் இத்துறைக்கு அனுமன் கட்டம் என்ற பெயர் உள்ளது. செந்தூரம் பூசிய திருமேனியுடன் வலக்கையை உயர்த்தி இடக்கையை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருகிறார்.